Saturday, November 19, 2011

உ..... ஊ....

2011-இல் தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பதங்கள் 'உண்ணாவிரதம்' மற்றும் 'ஊழல்' ஆகத்தான் இருக்க முடியும். தேசத்தின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து, அதே ஆண்டு ஒரு காந்தியவாதியால் மக்களிடையே ஊழலுக்கெதிரான ஓர் எழுச்சியும் ஏற்பட்டது.

திரு. அன்னா ஹசாரே மிகப்பெரிய மாற்றமொன்றை நிகழ்த்தியுள்ளார். எந்த நேரத்தில் ஊழலுக்கெதிரான போராட்டத்தைத் துவங்க வேண்டுமென கணக்கிட்டு கச்சிதமாக அதை நடத்திக் காட்டி விட்டார்.  உண்ணாவிரதம் துவங்கிய இரண்டாம் நாளே நான் நண்பர்களிடம் கூறிக்கொண்டிருந்தேன் 'லோக்பால் கொண்டுவருவது காங்கிரசின் கையில் மட்டுமில்லை. பா.ஜ.க முதலிய எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்று அன்னா கேட்டால் உண்ணாவிரதம் முடிந்துவிடும்'. அதுதான் இறுதியில் நடந்தது. ஊழலுக்கெதிரான கடுமையான சட்டத்துக்கு எந்தக் கட்சியுமே தயாராயில்லை என்பதே உண்மை. உண்ணாவிரதம் ஒருவகையில் ஆளுங்கட்சிக்கெதிரான போராட்டமாகத் தெரிந்ததால், எதிர்க்கட்சிகள் அதை ஆனந்தமாக ரசித்தன. பா.ஜ.க என்ன சொல்கிறது என்று அன்னா கேட்டதும் தான் 'ஆஹா நம்மையும் கோர்த்துட்டாரேய்யா..' என்று உதறல் வந்தது. அன்னாவுக்கு ஆதரவு என அவர்கள் கூறியதும், காங்கிரசுக்கும் வழியில்லை. எல்லாம் சுமூகமாக முடிந்தது. முதல் நாளே கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அன்னா காலம் தாழ்த்திக் கேட்டது தான் ஏனென்று புரியவில்லை. ஒருவேளை மக்கள் மனதை அறியவோ என்னவோ.

இதில் நாடு முழுவதுமான மக்களின் எழுச்சி மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.  இந்த எழுச்சி ஒருசில காரணங்களால் எனக்கு ஆச்சரியமாக தோன்றவில்லை.

1. ஏதாவது ஒருவிதத்தில் ஒவ்வோர் இந்தியனுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் தொடர்பிருக்கும். பாதிக்கப் பட்டவனாகவோ, பாதிப்பை ஏற்படுத்தியவனாகவோ, உதவியவனாகவோ இருந்திருப்பான். (விபத்தில் மரணமடைந்த என் தந்தையின் இறப்புச் சான்றிதழுக்கு 1995-ல் ரூ.500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. கிராமத்தில் எல்லோருக்குமே தெரிந்த அந்த துயரத்திலும் கூச்சமே இல்லாமல் லஞ்சம் கேட்ட அந்த அதிகாரிக்கெதிராக மாணவனான என்னால் போராட முடியாமல் போனது இன்றும் வருத்தமாக இருக்கிறது.) அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழல் சாதனைகளை ஆண்டாண்டு காலமாகக் கேட்டு வந்த அவனுக்கு அன்னாவின் உண்ணாவிரதம் போராட்ட மனப்பான்மையை எளிதில் தூண்டியது.

2. அன்னாவுக்கு ஆதரவாக சாலையில் இறங்கியவர்களுக்கு பொது எதிரியாக மத்திய அரசு தான் தெரிந்தது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கு எதிராகவோ போராடச் சொல்லியிருந்தால், பின்விளைவுகளை எண்ணி நிறையப் பேர் வீட்டினுள்ளேயே இருந்திருப்பார்கள். கண்ணுக்குத் தெரியாத எதிரி தானே என்று சாலைக்கு சுலபமாக வந்தனர். ஓட்டுனர் உரிமைக்காகவோ, நிலப் பதிவுக்காகவோ தங்கள் நண்பர்களிடமோ, பக்கத்து வீட்டாரிடமோ லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கெதிராகப் போராட இவர்களில் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.

ஊழலுக்கெதிரான போராட்டத்தை ஒவ்வோர் இளைஞனும் தன் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்ற திரு. அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது, லோக்பாலை விட முக்கியமாய் படுகிறது. அடுத்தவரை நோக்கி கை நீட்டுவது நமக்கெல்லாம் மிகச்சுலபமான ஒன்று. அரசியல்வாதிகள் திருந்த வேண்டும், அதிகாரிகள் திருந்த வேண்டும் என நினைப்போம் - நம் காரியம் என்று வரும்போது எல்லாக் குறுக்குவழிகளுக்கும் தயாராக இருப்போம்.

அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மத்திய அரசு கையாண்டவிதமும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று. அவரை திகாருக்கு அனுப்பியதும் மற்ற செயல்களும் மக்களை அவருக்கு ஆதரவாக சுலபமாக மாற்றியது. அறிவுஜீவி மத்திய அமைச்சர்களின் அமெச்சூர்த்தனமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.

உண்ணாவிரதப் போராட்டத்தால் தேசத்தின் ஆதரவைப் பெற்ற அன்னாவும், அவர் குழுவினரும் அதற்குப் பிறகு செய்த ஒருசில செயல்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை.

ஹரியானா இடைத்தேர்தலில் காங்கிரசுக்கெதிரான பிரச்சாரம் எந்தவிதத்திலும் நியாயமாய்ப் படவில்லை. ஒரு கட்சிக்கு எதிரான போராட்டமாய் இல்லாமல், வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்பால் மசாதா கொண்டுவர உறுதி அளிக்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு என்று சொல்லியிருந்தால் எல்லாக் கட்சியனரும் சரியென்று சொல்லியிருப்பார்கள் அல்லது அமைதியாக இருந்திருப்பார்கள். எல்லோரும் அமைதியாய் இருக்கும் பட்சத்தில் வாக்காளர்களை 49 ஓ-வுக்கு வாக்களிக்கச் சொல்லியிருக்கலாம். அது மற்றொரு புரட்சியாக அமைந்திருக்கும். அரசியல்வாதிகள் அலறி அடித்துக் கொண்டு லோக்பாலுக்கு சரியென்று சொல்லியிருப்பார்கள். எல்லாக் கட்சியினரும் சரியென்று சொல்லியிருப்பின் வேலை இன்னும் சுலபமாக இருந்திருக்கும். அதுவும் போக தங்கள் பிரச்சாரத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டால் என்ன செய்வது என்பதற்காக, அன்னாவின் ஊருக்கருகில் நடந்த சட்டமன்றத் தேர்தலை விட்டு விட்டு, பரவலாக வெற்றி பெற்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரஸ் மூன்றாமிடம் பெற்ற ஹரியானா தொகுதியைத் தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்ததும் சரியல்ல. அதுவும் போக அங்கே போட்டியிட்ட பா.ஜ.க ஆதரவு வேட்பாளரும், லோக்தள் கட்சியின் சவுதாலாவும் ஏற்கனவே ஊழல் குற்றம் சுமத்தப் பட்டவர்கள்.

தங்கள் பேச்சை மக்கள் கவனிக்கிறார்கள் என்றதும் தங்களின் முக்கியக் குறிக்கோளை விட்டு விட்டு எல்லா விசயத்திலும் மூக்கை நுழைப்பது தவறான ஒன்று. அப்படி காஷ்மீர் விசயத்தில் செய்துதான் பிரசாந்த் பூஷன் வாங்கிக் கட்டிக் கொண்டார். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், கிரண் பேடிக்குமான கருத்துமோதல்களும் ஆரோக்கியமான செய்தியல்ல.

அன்னாவின் போராட்டத்தின் அடிநாதமே ஊழலற்ற இந்தியா தான். அரசியல்வாதிகளுக்கெதிராக லோக்பால் கொண்டுவர அவருக்கு ஆதரவளிக்கும் ஒவ்வோர் இந்தியனும் தன்னுடைய வாழ்வில் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிடில் லோக்பாலும் மற்றொரு சக்தியில்லாத சட்டமாய் மாறிவிடும்.

ஜெய் ஹிந்த்...!





Monday, August 15, 2011

என்னமோ போங்க...

புத்தாண்டுக்குப் பின் எட்டரை மாதம் கழித்து சுதந்திர தினத்தன்று ஒரு பதிவேற்றம் செய்வதற்கு சோம்பேறித்தனத்தை விட வேறென்ன காரணம் இருக்க முடியும்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்...!

சீசனுக்கு வந்து போக நீங்க என்ன வேடந்தாங்கல் பறவையா என கவுண்டமணி நாட்டாமையில் கேட்பது போல புத்தாண்டுக்கும், சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து சொல்ல நம்ம என்ன மன்மோகன் சிங்கா?

எட்டரை மாதத்தில் என்ன என்னவோ நடந்து விட்டது... சில அரசியல் புள்ளிகள் உள்ளே, சில மந்திரிகள் வெளியே, சில ஆட்சியே மாறிப் போச்சு... இருந்தாலும் இந்தியா வளரும், நல்ல நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

கனிமொழியின் கைது பற்றி தெரிந்ததும் என் நண்பன் செந்தில் அனுப்பிய குறும்பா, குறும்பாகவும் இருந்தது, நன்றாகவும் இருந்தது

             ஊழலில் விழுந்த
             முதல் விதை ஈன்ற
              கடைசிக் கனி
              இன்று சிறையில்..
              தெய்வம் நின்றாலும்
               கொல்லும்.....

'நின்றாவது' என்பதை 'நின்றாலும்' என மாற்றினேன் அவன் அனுமதியுடன்...

எத்தனையோ கசப்பான செய்திகள் இருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் சில நல்லவர்களை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தாண்டுப் பதிவில் என் நண்பரைப் பற்றிக் கூறி இருந்தேன். அவரின் தந்தை செய்து கொண்டிருக்கும் நற்செயல் அதைவிட நெகிழ வைத்தது.. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு அவர்களின் வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் ஒருவர் அப்போது மாரடைப்பால் இறந்து விட்டார். அவரின் மகளை இன்று வரை நண்பரின் தந்தை தான் படிக்க வைக்கிறார். அந்தப் பெண் இப்போது +2 படிக்கிறார்.

என்னுடன் கோவையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். தாய்நாட்டின் மீதான அக்கறையாலும், நம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்தியாவிற்கே திரும்பி வந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார். இது அண்மையில் தான் எனக்கு தெரிய வந்தது. பெருமிதமாக இருந்தது.

ஜெய்ஹிந்த்....!


Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெருகி, ஆரோக்கியம் நிறைந்த, இனிமையான ஆண்டாய் அமைய இறைவன் அருளட்டும்.

புத்தாண்டு கடப்பாடு (resolution) எடுப்பது நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்று. இதுநாள் வரை அப்படி ஒன்றைத் தீவிரமாகச் செய்யாத நான், இம்முறை 'தினமும் யோகாசனமும், எளிய உடற்பயிற்சிகளும் செய்து உடல் நலனைப் பேணுவது' என்ற கடப்பாட்டை எடுத்துள்ளேன். இதை எவ்வளவு சரியாகச் செய்கிறேன் என்பதை ஒரு காலாண்டுக்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். :-)  இந்தக் கடப்பாடுகளைப் புத்தாண்டு தொடங்கும் போது தான் எடுக்க வேண்டுமா? எப்படியோ ஒரு நல்ல முடிவை (decision) அல்லது தொடக்கத்தை (beginning) எடுக்க புத்தாண்டு உதவுமானால் மகிழ்ச்சியே.

நமக்காகச் செய்யும் நல்ல உறுதிமொழிகளைப் போல இந்த சமூகத்திற்காகவும் நம்மால் இயன்றதைச் செய்தால் அதன் நிறைவே தனி தான். அப்படி என்ன நம்மால் பெரிதாகச் செய்து விட முடியும்? என்று எண்ணவே வேண்டியது இல்லை. நம்முடைய செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு ஒரு சிறு நன்மை விளைந்தாலே போதும். உதாரணத்திற்கு, உலகம் வெப்ப மயமாதலை (global warming) தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்? வீட்டில் மின்விளக்குகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்கலாமே? பலமுறை பல நண்பர்களின் இல்லங்களில் யாருமே இல்லாத அறைகளிலும் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறேன். அதைத் தவிர்த்தாலே போதுமே. :-)

நான்கு நண்பர்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த போது, நாம் படித்து வளர்ந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு ஏதாவது உபயோகமாகச் செய்தால் என்ன, அதன் மூலம் அடிப்படைத் தேவைகளுக்கே திணறிக் கொண்டிருக்கும் பள்ளிகள் பயனடையுமே என்று ஆலோசித்தார்கள். Team India என்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவானது. யார் அந்த நண்பர்கள்? தமிழகக் கிராமங்களில் படித்து அமெரிக்காவில் பணிபுரியும் கணினி வல்லுனர்கள் அவர்கள். சிறு புள்ளியாய்த் தொடங்கி இன்று மிகப் பெரிய அமைப்பாக மாறியுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதன் உறுப்பினர்களின் உதவியுடன் பல பள்ளிகள் பயனடைந்துள்ளன. www.indiateam.org இணையத் தளத்தில் எல்லா விபரங்களும் இருக்கின்றன. எவ்வளவு சிறந்த பணி இது?

என்னுடன் பணிபுரியும் என் நெருங்கிய நண்பர் தனது மகனின் பிறந்த நாளை சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடிய விதம் என்னை நெகிழ வைத்தது. சிங்கப்பூரில் மனவளர்ச்சி குறைந்த, வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கான பள்ளியைத் தேடிப் பிடித்து, அத்தியாவசியத் தேவை ஒன்றைப் பூர்த்தி செய்து கொள்ள வசதியில்லாத ஒரு குழந்தைக்கு அந்தத் தேவையைச் செய்து கொடுக்க முடிவு செய்தார். ஒரு குழந்தைக்கு பார்வைக் குறைபாடும் இருந்துள்ளது. அதைச் சொல்லக் கூட அந்தக் குழந்தைக்கு தெரியவில்லை. கண் பரிசோதனை செய்து, கண்ணாடியும் வாங்கிக் கொடுத்துள்ளார். கண்ணாடி அணிந்த அந்த நிமிடத்தில் குழந்தை அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியவில்லை என்றார். அங்குள்ள மற்ற குழந்தைகளுக்கும் சிறு பரிசுகள் கொடுத்தார். தன் மகனையும் உடன் அழைத்து சென்று வந்தார். அதற்கு அவர் கூறிய காரணமும் என்னைக் கவர்ந்தது. 'சமூகத்தில் இப்படியும் குழந்தைகள் இருக்கிறார்கள். பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்குவதை விட பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி என்பதை அவன் மனதில் இப்போதே விதைத்து விட வேண்டும்' என்று கூறினார்? இதை விடச் சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டம் வேறு எது இருக்க முடியும்? யார் அந்த நண்பர்? வெளியே சொன்னால் அவருக்கு பிடிக்காது. உதவிக் குறிப்பு ஒன்று தருகிறேன் - நீங்களே கண்டு பிடியுங்கள் :-) அவருக்கு இரண்டு மகன்கள்.

இந்தியாவில் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாகி விட்டது. எனது அண்ணன் கூடுமான வரை விபத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கு உதவுவார். தீபாவளியன்றும், அதற்கு அடுத்த நாளும் இரு விபத்தில் சிக்கியவர்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்ததாகக் கூறினார். இரண்டாம் நாள் விபத்தில் சிக்கிய இரு வாலிபர்களிடம் கையில் இருந்த 1000 ரூபாயும் கொடுத்ததாகச் சொன்னார். 'ஒரு சட்டை குறைவாக எடுத்ததாக நினைத்துக் கொள்வோம்' என்றார். மகிழ்ச்சியாய் இருந்தது.

மிகப் பெரிய சமூக மாற்றங்களை செய்ய இயலாவிடினும் பரவாயில்லை. மேலே சொன்ன உதாரணங்கள் போல நம்மால் இயன்றதைச் செய்தாலே போதும். நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ செய்த இது போன்ற நல்ல செயல்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

அலுவலக உரையாடல் ஒன்றில் தனிமையே மன உளைச்சலுக்கான காரணங்களில் முக்கியமானது என்று பேசிக் கொண்டிருந்தோம். அன்றிரவு வீட்டில், ( தனிமையில் :-) )அதைப் பற்றி யோசித்து கொண்டிருந்த போது தோன்றிய வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதை ஒரு கவிதையாய் மாற்ற முயற்சிக்கிறேன்.

            மௌனத்தின் அலறலை விட
             இரைச்சலின் நிசப்தம்
             பெரும்பாலான நேரங்களில்
              இதமாய் இருக்கிறது
              மனதுக்கு...

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! நமக்கும், சமூகத்திற்குமான நற்செயல்களை நம்மால் இயன்றவரை செய்வோம்.