Saturday, November 19, 2011

உ..... ஊ....

2011-இல் தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பதங்கள் 'உண்ணாவிரதம்' மற்றும் 'ஊழல்' ஆகத்தான் இருக்க முடியும். தேசத்தின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து, அதே ஆண்டு ஒரு காந்தியவாதியால் மக்களிடையே ஊழலுக்கெதிரான ஓர் எழுச்சியும் ஏற்பட்டது.

திரு. அன்னா ஹசாரே மிகப்பெரிய மாற்றமொன்றை நிகழ்த்தியுள்ளார். எந்த நேரத்தில் ஊழலுக்கெதிரான போராட்டத்தைத் துவங்க வேண்டுமென கணக்கிட்டு கச்சிதமாக அதை நடத்திக் காட்டி விட்டார்.  உண்ணாவிரதம் துவங்கிய இரண்டாம் நாளே நான் நண்பர்களிடம் கூறிக்கொண்டிருந்தேன் 'லோக்பால் கொண்டுவருவது காங்கிரசின் கையில் மட்டுமில்லை. பா.ஜ.க முதலிய எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்று அன்னா கேட்டால் உண்ணாவிரதம் முடிந்துவிடும்'. அதுதான் இறுதியில் நடந்தது. ஊழலுக்கெதிரான கடுமையான சட்டத்துக்கு எந்தக் கட்சியுமே தயாராயில்லை என்பதே உண்மை. உண்ணாவிரதம் ஒருவகையில் ஆளுங்கட்சிக்கெதிரான போராட்டமாகத் தெரிந்ததால், எதிர்க்கட்சிகள் அதை ஆனந்தமாக ரசித்தன. பா.ஜ.க என்ன சொல்கிறது என்று அன்னா கேட்டதும் தான் 'ஆஹா நம்மையும் கோர்த்துட்டாரேய்யா..' என்று உதறல் வந்தது. அன்னாவுக்கு ஆதரவு என அவர்கள் கூறியதும், காங்கிரசுக்கும் வழியில்லை. எல்லாம் சுமூகமாக முடிந்தது. முதல் நாளே கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அன்னா காலம் தாழ்த்திக் கேட்டது தான் ஏனென்று புரியவில்லை. ஒருவேளை மக்கள் மனதை அறியவோ என்னவோ.

இதில் நாடு முழுவதுமான மக்களின் எழுச்சி மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.  இந்த எழுச்சி ஒருசில காரணங்களால் எனக்கு ஆச்சரியமாக தோன்றவில்லை.

1. ஏதாவது ஒருவிதத்தில் ஒவ்வோர் இந்தியனுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் தொடர்பிருக்கும். பாதிக்கப் பட்டவனாகவோ, பாதிப்பை ஏற்படுத்தியவனாகவோ, உதவியவனாகவோ இருந்திருப்பான். (விபத்தில் மரணமடைந்த என் தந்தையின் இறப்புச் சான்றிதழுக்கு 1995-ல் ரூ.500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. கிராமத்தில் எல்லோருக்குமே தெரிந்த அந்த துயரத்திலும் கூச்சமே இல்லாமல் லஞ்சம் கேட்ட அந்த அதிகாரிக்கெதிராக மாணவனான என்னால் போராட முடியாமல் போனது இன்றும் வருத்தமாக இருக்கிறது.) அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழல் சாதனைகளை ஆண்டாண்டு காலமாகக் கேட்டு வந்த அவனுக்கு அன்னாவின் உண்ணாவிரதம் போராட்ட மனப்பான்மையை எளிதில் தூண்டியது.

2. அன்னாவுக்கு ஆதரவாக சாலையில் இறங்கியவர்களுக்கு பொது எதிரியாக மத்திய அரசு தான் தெரிந்தது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கு எதிராகவோ போராடச் சொல்லியிருந்தால், பின்விளைவுகளை எண்ணி நிறையப் பேர் வீட்டினுள்ளேயே இருந்திருப்பார்கள். கண்ணுக்குத் தெரியாத எதிரி தானே என்று சாலைக்கு சுலபமாக வந்தனர். ஓட்டுனர் உரிமைக்காகவோ, நிலப் பதிவுக்காகவோ தங்கள் நண்பர்களிடமோ, பக்கத்து வீட்டாரிடமோ லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கெதிராகப் போராட இவர்களில் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.

ஊழலுக்கெதிரான போராட்டத்தை ஒவ்வோர் இளைஞனும் தன் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்ற திரு. அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது, லோக்பாலை விட முக்கியமாய் படுகிறது. அடுத்தவரை நோக்கி கை நீட்டுவது நமக்கெல்லாம் மிகச்சுலபமான ஒன்று. அரசியல்வாதிகள் திருந்த வேண்டும், அதிகாரிகள் திருந்த வேண்டும் என நினைப்போம் - நம் காரியம் என்று வரும்போது எல்லாக் குறுக்குவழிகளுக்கும் தயாராக இருப்போம்.

அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மத்திய அரசு கையாண்டவிதமும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று. அவரை திகாருக்கு அனுப்பியதும் மற்ற செயல்களும் மக்களை அவருக்கு ஆதரவாக சுலபமாக மாற்றியது. அறிவுஜீவி மத்திய அமைச்சர்களின் அமெச்சூர்த்தனமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.

உண்ணாவிரதப் போராட்டத்தால் தேசத்தின் ஆதரவைப் பெற்ற அன்னாவும், அவர் குழுவினரும் அதற்குப் பிறகு செய்த ஒருசில செயல்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை.

ஹரியானா இடைத்தேர்தலில் காங்கிரசுக்கெதிரான பிரச்சாரம் எந்தவிதத்திலும் நியாயமாய்ப் படவில்லை. ஒரு கட்சிக்கு எதிரான போராட்டமாய் இல்லாமல், வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்பால் மசாதா கொண்டுவர உறுதி அளிக்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு என்று சொல்லியிருந்தால் எல்லாக் கட்சியனரும் சரியென்று சொல்லியிருப்பார்கள் அல்லது அமைதியாக இருந்திருப்பார்கள். எல்லோரும் அமைதியாய் இருக்கும் பட்சத்தில் வாக்காளர்களை 49 ஓ-வுக்கு வாக்களிக்கச் சொல்லியிருக்கலாம். அது மற்றொரு புரட்சியாக அமைந்திருக்கும். அரசியல்வாதிகள் அலறி அடித்துக் கொண்டு லோக்பாலுக்கு சரியென்று சொல்லியிருப்பார்கள். எல்லாக் கட்சியினரும் சரியென்று சொல்லியிருப்பின் வேலை இன்னும் சுலபமாக இருந்திருக்கும். அதுவும் போக தங்கள் பிரச்சாரத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டால் என்ன செய்வது என்பதற்காக, அன்னாவின் ஊருக்கருகில் நடந்த சட்டமன்றத் தேர்தலை விட்டு விட்டு, பரவலாக வெற்றி பெற்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரஸ் மூன்றாமிடம் பெற்ற ஹரியானா தொகுதியைத் தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்ததும் சரியல்ல. அதுவும் போக அங்கே போட்டியிட்ட பா.ஜ.க ஆதரவு வேட்பாளரும், லோக்தள் கட்சியின் சவுதாலாவும் ஏற்கனவே ஊழல் குற்றம் சுமத்தப் பட்டவர்கள்.

தங்கள் பேச்சை மக்கள் கவனிக்கிறார்கள் என்றதும் தங்களின் முக்கியக் குறிக்கோளை விட்டு விட்டு எல்லா விசயத்திலும் மூக்கை நுழைப்பது தவறான ஒன்று. அப்படி காஷ்மீர் விசயத்தில் செய்துதான் பிரசாந்த் பூஷன் வாங்கிக் கட்டிக் கொண்டார். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், கிரண் பேடிக்குமான கருத்துமோதல்களும் ஆரோக்கியமான செய்தியல்ல.

அன்னாவின் போராட்டத்தின் அடிநாதமே ஊழலற்ற இந்தியா தான். அரசியல்வாதிகளுக்கெதிராக லோக்பால் கொண்டுவர அவருக்கு ஆதரவளிக்கும் ஒவ்வோர் இந்தியனும் தன்னுடைய வாழ்வில் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிடில் லோக்பாலும் மற்றொரு சக்தியில்லாத சட்டமாய் மாறிவிடும்.

ஜெய் ஹிந்த்...!