அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு எல்லாச் சிறப்புக்களையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன். 2011 இந்தியாவிற்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. 2012 சிறப்பானதாக அமைய எல்லோரும் வேண்டுவோம்..நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.
ஊழல்.. அன்னா ஹசாரே-வுக்கு அடுத்ததாக பிரபலமான செய்திகள்.. கொலவெறி-டியும், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடும், முல்லைப் பெரியாறும். கொலவெறியைப் பற்றி எழுத ஒன்றுமில்லை. முல்லைப் பெரியாறு பற்றி இன்னும் நிறைய தெரிய வேண்டி இருக்கிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முயன்றதும், அதன் பாதகங்கள் என ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டு அதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததும், காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளே எதிர்த்ததும், வேறு வழியின்றி அரசு பின்வாங்கியதும் அனைவரும் அறிந்ததே. இதில் எல்லா அரசியல் கட்சிகளுமே சுலபமாக, கண்டுகொள்ளாமல் விட்ட ஒரு செய்தி...'விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள்' . இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய பயன் என மத்திய அரசு கூறியது.
உண்மையிலேயே விவசாயிகளுக்கு பெரிய பயன் கிட்டுமா, அவர்கள் வாழ்க்கை சிறப்புறுமா என்பதெல்லாம் இருக்கட்டும்.. ஒரு திட்டத்தால் ஒரு பயன் கிடைக்கும் என்று அரசு சொல்கிற போது, அதை எதிர்ப்பவர்கள், அந்தத் திட்டத்தின் பாதகங்களை மட்டுமே பேசாமல், பயன்கள் என்று அரசு சொல்லும் விசயங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்று, அரசு சொல்லும் பயன்கள் கிடைக்காது என்று விளக்க வேண்டும் அல்லது அந்தப் பயன்களை இந்தத் திட்டம் இல்லாமலேயே எப்படி அடைய முடியும் என்பது குறித்து பேச வேண்டும்.
அரசின் திட்டங்களையோ, கொள்கைரீதியான முடிவுகளையோ எதிர்ப்பது மட்டுமே இந்திய எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க உட்பட எல்லோருக்குமே இது பொருந்தும். மாற்றுச் சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் தருவதும் எதிர்க்கட்சிகளின் வேலை தான். வணிகர்களின் பிரச்னை மட்டுமே அரசியல் செய்ய போதமானதாக இருந்தது.
இன்றைய அளவில் மிகப் பெரிய பிரச்னைகளை சந்திக்கும், தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி, யாராலும் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போன, ஆனால் இந்தியாவின் முதுகெலும்பான தொழிலை செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் இருப்பவர்கள், இந்திய விவசாயிகள். இது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, இந்தியாவின் வருங்காலத்தையே வளப்படுத்தும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை நாம் கோட்டை விடுகிறோமோ என்ற கேள்வியை நான் அண்மையில் படித்த செய்தியொன்று என்னுள் எழுப்பியது.
ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் துறையின் ஆய்வறிக்கை ஒன்று, உலகின் உணவுத்தேவை 2050-இல் இன்றைய அளவில் இருந்து 70% அதிகமாக இருக்கும், என்கிறது. அதாவது, ஒரு பில்லியன் டன் அரிசி, கோதுமை, தானியங்கள் மற்றும் 200 மில்லியன் டன் மாமிச உணவு அதிகமாக தேவைப்படும். உணவு மற்றும் வேளாண்மைக்குத் தேவையான நில மற்றும் நீராதாரங்கள் குறித்து இந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு தான் இது.
மண் மற்றும் நீர் மாசுபாடு உணவு உற்பத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்த ஆராய்ச்சியை விட உலகின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா என்ன செய்யலாம், இதை நமக்கு சாதகமான ஒரு வாய்ப்பாக மாற்றி எப்படி வளம் பெறலாம் என்று சிந்திப்பது முக்கியமாய் படுகிறது.
விவசாயத்தை மேம்படுத்துவது இந்தியாவிற்கு எல்லாவிதத்திலும் உதவியாய் இருக்கும். விவசாயக் குடும்பங்கள் மட்டுமல்ல, அதைச் சார்ந்து இருந்தவர்களும், நகர்ப்புறங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காக வருவது அதிகரித்து விட்டது. தகுந்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையில் வரும் வருமானத்தில் அவர்கள் வாழும் கடைநிலை வாழ்க்கை மிகத் துயரமானது. குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என நகரின் எல்லா தேவைகளும் பிரச்னைகளுக்குள்ளாகின்றன.
விதைக்கும், ஆரம்ப முதலீட்டுக்குமே இடைத்தரகர்களிடம் முன்பணம் வாங்கி தொழில் செய்யும் நிலையில் இருக்கும் விவசாயிகளால் தங்கள் விளைச்சலுக்கு எப்படித் தகுந்த விலையை நிர்ணயிக்க முடியும். இடைத்தரகரின் முடிவு தான் விலையாகிறது. இதையெல்லாம் மீறியும் விளையும் போது, பருவநிலை மாறுபாடுகளால் காற்றோ, மழையோ, வறட்சியோ பயிர்களை நாசம் செய்து விடும். பயிர்க் காப்பீடு குறித்த திட்டங்கள் தெளிவாக இல்லை.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒன்றிரண்டு குடும்பங்களில் இருந்து படித்து வெளியேறும் பிள்ளைகளால் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயரும் போது, மற்ற பிள்ளைகளுக்கும் விவசாயத்தை விட கணினியோ வேறு வேலையோ தான் உசிதமாகப் படும். விவசாயம் செய்பவர்கள் குறைய, குறைய அதைச் சார்ந்துள்ளோர்களும் நகரை நோக்கி நகருகின்றனர். கிராமங்களின் உயிர்நாடி விவசாயம்.
விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம்,
1. சமூகச் சமநிலையை அடையலாம். கிராமங்கள் மேம்படும். நகரங்களின் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்.
2. உலக உணவுத் தேவையை நமக்கான சந்தையாய் மாற்றி இந்தியாவின் பொருளாதாரம் உயரும்.
3. உலகமயமாக்கலின் தாக்கமின்றி, நம் பொருளாதாரம் பிற நாடுகளைச் சார்ந்திராமல், நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.
4. விவசாயம் குறித்த கல்விக்கான ஆர்வம் அதிகரிக்கும். இது விவசாயத் தொழிலின் ஆராய்ச்சிகளிலும், வளர்ச்சியிலும் நம்மை முன்னோடியாக்கும்.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் இவைகளின் தாரக மந்திரமே 'வாய்ப்புக்களைகச் சரிவர பயன்படுத்திக் கொள்ளுதல்'. வளர்ந்த நாடுகள் இதைத் தான் செய்கின்றன - எங்கு முதலீடு செய்வது, எதில் செய்வது எனத் தெளிவாக காய் நகர்த்துகின்றன. உணவு உற்பத்தியில் நாங்கள் தான் ராஜா, அதன் சந்தையை தீர்மானிப்பது நாங்கள் தான் என்ற நிலையை அடைய வேண்டும்.
பொருளாதாரம், சமூக மேம்பாடு, மக்கள் வாழ்க்கைத் தரம் என எல்லா வளர்ச்சிகளையும் அடைய உதவும் விவசாயத்திற்கு இனியாவது நமது அரசுகள் முக்கியத்துவம் தந்து பயன் பெறுமா? மிகப் பெரிய முயற்சியைச் செய்தாலன்றி இதை அடைவது சாத்தியமன்று.. ஆனால் நம்மால் முடியும், அதற்குத் தேவையான மனிதவளம் நம்மிடம் இருக்கிறது.
நீராதாரங்களை பெருக்குவது, நவீன உத்திகளை விவசாயிகளுக்கு கற்றுத் தருவது, தேவையான மானியங்களை அளிப்பது (அமெரிக்கா இன்றளவிலும் மிக அதிக அளவில் மானியங்களை அதன் விவசாயிகளுக்கு அளித்து வருகிறது), நியாயமான விலையை உறுதி செய்வது, கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, பயிர்க் காப்பீடு முதற்கொண்டு உலக அளவிலான சந்தை நிலவரம் வரையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல வேலைகள் இருக்கின்றன. வேளாண் துறைக்கு விவசாயத்தில் ஆர்வம் இருக்கிற ஒருவரை மாநில அரசும், மத்திய அரசும் அமைச்சராக நியமிப்பதே முக்கியமானதும், முதல் வேலையுமாகும். இது பிற துறைகளுக்கும் பொருந்தும்.
இனியும் விவசாயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தோமேயானால், இந்தக் கட்டுரையின் தலைப்பு உண்மையாகி விடும். தாய்லாந்தோ, இந்தோனேசியாவோ நமக்கு அரிசி ஏற்றுமதி செய்வார்கள். ஐஃபோனில் கொலைவெறிடி கேட்டுக் கொண்டே தமிழன் (ஏன் இந்தியாவே) தாய்லாந்து அரிசியைப் பொங்கிச் சாப்பிடுவான்.