Monday, January 2, 2012

ஐஃபோன் ரூபாய் ஐம்பது...அரிசி கிலோ ரூபாய் ஆயிரம்...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு எல்லாச் சிறப்புக்களையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன். 2011 இந்தியாவிற்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. 2012 சிறப்பானதாக அமைய எல்லோரும் வேண்டுவோம்..நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

ஊழல்.. அன்னா ஹசாரே-வுக்கு அடுத்ததாக பிரபலமான செய்திகள்.. கொலவெறி-டியும், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடும், முல்லைப் பெரியாறும். கொலவெறியைப் பற்றி எழுத ஒன்றுமில்லை. முல்லைப் பெரியாறு பற்றி இன்னும் நிறைய தெரிய வேண்டி இருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முயன்றதும், அதன் பாதகங்கள் என ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டு அதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததும், காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளே எதிர்த்ததும், வேறு வழியின்றி அரசு பின்வாங்கியதும் அனைவரும் அறிந்ததே. இதில் எல்லா அரசியல் கட்சிகளுமே சுலபமாக, கண்டுகொள்ளாமல் விட்ட ஒரு செய்தி...'விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள்' . இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய பயன் என மத்திய அரசு கூறியது.

உண்மையிலேயே விவசாயிகளுக்கு பெரிய பயன் கிட்டுமா, அவர்கள் வாழ்க்கை சிறப்புறுமா என்பதெல்லாம் இருக்கட்டும்..  ஒரு திட்டத்தால் ஒரு பயன் கிடைக்கும் என்று அரசு சொல்கிற போது, அதை எதிர்ப்பவர்கள், அந்தத் திட்டத்தின் பாதகங்களை மட்டுமே பேசாமல், பயன்கள் என்று அரசு சொல்லும் விசயங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்று, அரசு சொல்லும் பயன்கள் கிடைக்காது என்று விளக்க வேண்டும் அல்லது அந்தப் பயன்களை இந்தத் திட்டம் இல்லாமலேயே எப்படி அடைய முடியும் என்பது குறித்து பேச வேண்டும்.

அரசின் திட்டங்களையோ, கொள்கைரீதியான முடிவுகளையோ எதிர்ப்பது மட்டுமே இந்திய எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க உட்பட எல்லோருக்குமே இது பொருந்தும். மாற்றுச் சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் தருவதும் எதிர்க்கட்சிகளின் வேலை தான். வணிகர்களின் பிரச்னை மட்டுமே அரசியல் செய்ய போதமானதாக இருந்தது.

இன்றைய அளவில் மிகப் பெரிய பிரச்னைகளை சந்திக்கும், தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி, யாராலும் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போன, ஆனால் இந்தியாவின் முதுகெலும்பான தொழிலை செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் இருப்பவர்கள், இந்திய விவசாயிகள். இது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, இந்தியாவின் வருங்காலத்தையே வளப்படுத்தும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை நாம் கோட்டை விடுகிறோமோ என்ற கேள்வியை நான் அண்மையில் படித்த செய்தியொன்று என்னுள் எழுப்பியது.

ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் துறையின் ஆய்வறிக்கை ஒன்று, உலகின் உணவுத்தேவை 2050-இல் இன்றைய அளவில் இருந்து 70% அதிகமாக இருக்கும், என்கிறது. அதாவது, ஒரு பில்லியன் டன் அரிசி, கோதுமை, தானியங்கள் மற்றும் 200 மில்லியன் டன் மாமிச உணவு அதிகமாக தேவைப்படும். உணவு மற்றும் வேளாண்மைக்குத் தேவையான நில மற்றும் நீராதாரங்கள் குறித்து இந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு தான் இது.

மண் மற்றும் நீர் மாசுபாடு உணவு உற்பத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்த ஆராய்ச்சியை விட உலகின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா என்ன செய்யலாம், இதை நமக்கு சாதகமான ஒரு வாய்ப்பாக மாற்றி எப்படி வளம் பெறலாம் என்று சிந்திப்பது முக்கியமாய் படுகிறது.

விவசாயத்தை மேம்படுத்துவது இந்தியாவிற்கு எல்லாவிதத்திலும் உதவியாய் இருக்கும். விவசாயக் குடும்பங்கள் மட்டுமல்ல, அதைச் சார்ந்து இருந்தவர்களும், நகர்ப்புறங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காக வருவது அதிகரித்து விட்டது. தகுந்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையில் வரும் வருமானத்தில் அவர்கள் வாழும் கடைநிலை வாழ்க்கை மிகத் துயரமானது. குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என நகரின் எல்லா தேவைகளும் பிரச்னைகளுக்குள்ளாகின்றன.

விதைக்கும், ஆரம்ப முதலீட்டுக்குமே இடைத்தரகர்களிடம் முன்பணம் வாங்கி தொழில் செய்யும் நிலையில் இருக்கும் விவசாயிகளால் தங்கள் விளைச்சலுக்கு எப்படித் தகுந்த விலையை நிர்ணயிக்க முடியும். இடைத்தரகரின் முடிவு தான் விலையாகிறது. இதையெல்லாம் மீறியும் விளையும் போது, பருவநிலை மாறுபாடுகளால் காற்றோ, மழையோ, வறட்சியோ பயிர்களை நாசம் செய்து விடும். பயிர்க் காப்பீடு குறித்த திட்டங்கள் தெளிவாக இல்லை.

ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒன்றிரண்டு குடும்பங்களில் இருந்து படித்து வெளியேறும் பிள்ளைகளால் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயரும் போது, மற்ற பிள்ளைகளுக்கும் விவசாயத்தை விட கணினியோ வேறு வேலையோ தான் உசிதமாகப் படும். விவசாயம் செய்பவர்கள் குறைய, குறைய அதைச் சார்ந்துள்ளோர்களும் நகரை நோக்கி நகருகின்றனர். கிராமங்களின் உயிர்நாடி விவசாயம்.

விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம்,

1. சமூகச் சமநிலையை அடையலாம். கிராமங்கள் மேம்படும். நகரங்களின் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்.

2. உலக உணவுத் தேவையை நமக்கான சந்தையாய் மாற்றி இந்தியாவின் பொருளாதாரம் உயரும்.

3. உலகமயமாக்கலின் தாக்கமின்றி, நம் பொருளாதாரம் பிற நாடுகளைச் சார்ந்திராமல், நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

4. விவசாயம் குறித்த கல்விக்கான ஆர்வம் அதிகரிக்கும். இது விவசாயத் தொழிலின் ஆராய்ச்சிகளிலும், வளர்ச்சியிலும் நம்மை முன்னோடியாக்கும்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் இவைகளின் தாரக மந்திரமே 'வாய்ப்புக்களைகச் சரிவர பயன்படுத்திக் கொள்ளுதல்'. வளர்ந்த நாடுகள் இதைத் தான் செய்கின்றன - எங்கு முதலீடு செய்வது, எதில் செய்வது எனத் தெளிவாக காய் நகர்த்துகின்றன. உணவு உற்பத்தியில் நாங்கள் தான் ராஜா, அதன் சந்தையை தீர்மானிப்பது நாங்கள் தான் என்ற நிலையை அடைய வேண்டும்.

பொருளாதாரம், சமூக மேம்பாடு, மக்கள் வாழ்க்கைத் தரம் என எல்லா வளர்ச்சிகளையும் அடைய உதவும் விவசாயத்திற்கு இனியாவது நமது அரசுகள் முக்கியத்துவம் தந்து பயன் பெறுமா? மிகப் பெரிய முயற்சியைச் செய்தாலன்றி இதை அடைவது சாத்தியமன்று.. ஆனால் நம்மால் முடியும், அதற்குத் தேவையான மனிதவளம் நம்மிடம் இருக்கிறது.

நீராதாரங்களை பெருக்குவது, நவீன உத்திகளை விவசாயிகளுக்கு கற்றுத் தருவது, தேவையான மானியங்களை அளிப்பது (அமெரிக்கா இன்றளவிலும் மிக அதிக அளவில் மானியங்களை அதன் விவசாயிகளுக்கு அளித்து வருகிறது), நியாயமான விலையை உறுதி செய்வது, கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, பயிர்க் காப்பீடு முதற்கொண்டு உலக அளவிலான சந்தை நிலவரம் வரையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல வேலைகள் இருக்கின்றன. வேளாண் துறைக்கு விவசாயத்தில் ஆர்வம் இருக்கிற ஒருவரை மாநில அரசும், மத்திய அரசும் அமைச்சராக நியமிப்பதே முக்கியமானதும், முதல் வேலையுமாகும். இது பிற துறைகளுக்கும் பொருந்தும்.

இனியும் விவசாயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தோமேயானால், இந்தக் கட்டுரையின் தலைப்பு உண்மையாகி விடும். தாய்லாந்தோ, இந்தோனேசியாவோ நமக்கு அரிசி ஏற்றுமதி செய்வார்கள். ஐஃபோனில் கொலைவெறிடி கேட்டுக் கொண்டே தமிழன் (ஏன் இந்தியாவே)  தாய்லாந்து அரிசியைப் பொங்கிச் சாப்பிடுவான்.






Saturday, November 19, 2011

உ..... ஊ....

2011-இல் தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பதங்கள் 'உண்ணாவிரதம்' மற்றும் 'ஊழல்' ஆகத்தான் இருக்க முடியும். தேசத்தின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து, அதே ஆண்டு ஒரு காந்தியவாதியால் மக்களிடையே ஊழலுக்கெதிரான ஓர் எழுச்சியும் ஏற்பட்டது.

திரு. அன்னா ஹசாரே மிகப்பெரிய மாற்றமொன்றை நிகழ்த்தியுள்ளார். எந்த நேரத்தில் ஊழலுக்கெதிரான போராட்டத்தைத் துவங்க வேண்டுமென கணக்கிட்டு கச்சிதமாக அதை நடத்திக் காட்டி விட்டார்.  உண்ணாவிரதம் துவங்கிய இரண்டாம் நாளே நான் நண்பர்களிடம் கூறிக்கொண்டிருந்தேன் 'லோக்பால் கொண்டுவருவது காங்கிரசின் கையில் மட்டுமில்லை. பா.ஜ.க முதலிய எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்று அன்னா கேட்டால் உண்ணாவிரதம் முடிந்துவிடும்'. அதுதான் இறுதியில் நடந்தது. ஊழலுக்கெதிரான கடுமையான சட்டத்துக்கு எந்தக் கட்சியுமே தயாராயில்லை என்பதே உண்மை. உண்ணாவிரதம் ஒருவகையில் ஆளுங்கட்சிக்கெதிரான போராட்டமாகத் தெரிந்ததால், எதிர்க்கட்சிகள் அதை ஆனந்தமாக ரசித்தன. பா.ஜ.க என்ன சொல்கிறது என்று அன்னா கேட்டதும் தான் 'ஆஹா நம்மையும் கோர்த்துட்டாரேய்யா..' என்று உதறல் வந்தது. அன்னாவுக்கு ஆதரவு என அவர்கள் கூறியதும், காங்கிரசுக்கும் வழியில்லை. எல்லாம் சுமூகமாக முடிந்தது. முதல் நாளே கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அன்னா காலம் தாழ்த்திக் கேட்டது தான் ஏனென்று புரியவில்லை. ஒருவேளை மக்கள் மனதை அறியவோ என்னவோ.

இதில் நாடு முழுவதுமான மக்களின் எழுச்சி மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.  இந்த எழுச்சி ஒருசில காரணங்களால் எனக்கு ஆச்சரியமாக தோன்றவில்லை.

1. ஏதாவது ஒருவிதத்தில் ஒவ்வோர் இந்தியனுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் தொடர்பிருக்கும். பாதிக்கப் பட்டவனாகவோ, பாதிப்பை ஏற்படுத்தியவனாகவோ, உதவியவனாகவோ இருந்திருப்பான். (விபத்தில் மரணமடைந்த என் தந்தையின் இறப்புச் சான்றிதழுக்கு 1995-ல் ரூ.500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. கிராமத்தில் எல்லோருக்குமே தெரிந்த அந்த துயரத்திலும் கூச்சமே இல்லாமல் லஞ்சம் கேட்ட அந்த அதிகாரிக்கெதிராக மாணவனான என்னால் போராட முடியாமல் போனது இன்றும் வருத்தமாக இருக்கிறது.) அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழல் சாதனைகளை ஆண்டாண்டு காலமாகக் கேட்டு வந்த அவனுக்கு அன்னாவின் உண்ணாவிரதம் போராட்ட மனப்பான்மையை எளிதில் தூண்டியது.

2. அன்னாவுக்கு ஆதரவாக சாலையில் இறங்கியவர்களுக்கு பொது எதிரியாக மத்திய அரசு தான் தெரிந்தது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கு எதிராகவோ போராடச் சொல்லியிருந்தால், பின்விளைவுகளை எண்ணி நிறையப் பேர் வீட்டினுள்ளேயே இருந்திருப்பார்கள். கண்ணுக்குத் தெரியாத எதிரி தானே என்று சாலைக்கு சுலபமாக வந்தனர். ஓட்டுனர் உரிமைக்காகவோ, நிலப் பதிவுக்காகவோ தங்கள் நண்பர்களிடமோ, பக்கத்து வீட்டாரிடமோ லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கெதிராகப் போராட இவர்களில் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.

ஊழலுக்கெதிரான போராட்டத்தை ஒவ்வோர் இளைஞனும் தன் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்ற திரு. அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது, லோக்பாலை விட முக்கியமாய் படுகிறது. அடுத்தவரை நோக்கி கை நீட்டுவது நமக்கெல்லாம் மிகச்சுலபமான ஒன்று. அரசியல்வாதிகள் திருந்த வேண்டும், அதிகாரிகள் திருந்த வேண்டும் என நினைப்போம் - நம் காரியம் என்று வரும்போது எல்லாக் குறுக்குவழிகளுக்கும் தயாராக இருப்போம்.

அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மத்திய அரசு கையாண்டவிதமும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று. அவரை திகாருக்கு அனுப்பியதும் மற்ற செயல்களும் மக்களை அவருக்கு ஆதரவாக சுலபமாக மாற்றியது. அறிவுஜீவி மத்திய அமைச்சர்களின் அமெச்சூர்த்தனமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.

உண்ணாவிரதப் போராட்டத்தால் தேசத்தின் ஆதரவைப் பெற்ற அன்னாவும், அவர் குழுவினரும் அதற்குப் பிறகு செய்த ஒருசில செயல்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை.

ஹரியானா இடைத்தேர்தலில் காங்கிரசுக்கெதிரான பிரச்சாரம் எந்தவிதத்திலும் நியாயமாய்ப் படவில்லை. ஒரு கட்சிக்கு எதிரான போராட்டமாய் இல்லாமல், வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்பால் மசாதா கொண்டுவர உறுதி அளிக்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு என்று சொல்லியிருந்தால் எல்லாக் கட்சியனரும் சரியென்று சொல்லியிருப்பார்கள் அல்லது அமைதியாக இருந்திருப்பார்கள். எல்லோரும் அமைதியாய் இருக்கும் பட்சத்தில் வாக்காளர்களை 49 ஓ-வுக்கு வாக்களிக்கச் சொல்லியிருக்கலாம். அது மற்றொரு புரட்சியாக அமைந்திருக்கும். அரசியல்வாதிகள் அலறி அடித்துக் கொண்டு லோக்பாலுக்கு சரியென்று சொல்லியிருப்பார்கள். எல்லாக் கட்சியினரும் சரியென்று சொல்லியிருப்பின் வேலை இன்னும் சுலபமாக இருந்திருக்கும். அதுவும் போக தங்கள் பிரச்சாரத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டால் என்ன செய்வது என்பதற்காக, அன்னாவின் ஊருக்கருகில் நடந்த சட்டமன்றத் தேர்தலை விட்டு விட்டு, பரவலாக வெற்றி பெற்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரஸ் மூன்றாமிடம் பெற்ற ஹரியானா தொகுதியைத் தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்ததும் சரியல்ல. அதுவும் போக அங்கே போட்டியிட்ட பா.ஜ.க ஆதரவு வேட்பாளரும், லோக்தள் கட்சியின் சவுதாலாவும் ஏற்கனவே ஊழல் குற்றம் சுமத்தப் பட்டவர்கள்.

தங்கள் பேச்சை மக்கள் கவனிக்கிறார்கள் என்றதும் தங்களின் முக்கியக் குறிக்கோளை விட்டு விட்டு எல்லா விசயத்திலும் மூக்கை நுழைப்பது தவறான ஒன்று. அப்படி காஷ்மீர் விசயத்தில் செய்துதான் பிரசாந்த் பூஷன் வாங்கிக் கட்டிக் கொண்டார். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், கிரண் பேடிக்குமான கருத்துமோதல்களும் ஆரோக்கியமான செய்தியல்ல.

அன்னாவின் போராட்டத்தின் அடிநாதமே ஊழலற்ற இந்தியா தான். அரசியல்வாதிகளுக்கெதிராக லோக்பால் கொண்டுவர அவருக்கு ஆதரவளிக்கும் ஒவ்வோர் இந்தியனும் தன்னுடைய வாழ்வில் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிடில் லோக்பாலும் மற்றொரு சக்தியில்லாத சட்டமாய் மாறிவிடும்.

ஜெய் ஹிந்த்...!





Monday, August 15, 2011

என்னமோ போங்க...

புத்தாண்டுக்குப் பின் எட்டரை மாதம் கழித்து சுதந்திர தினத்தன்று ஒரு பதிவேற்றம் செய்வதற்கு சோம்பேறித்தனத்தை விட வேறென்ன காரணம் இருக்க முடியும்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்...!

சீசனுக்கு வந்து போக நீங்க என்ன வேடந்தாங்கல் பறவையா என கவுண்டமணி நாட்டாமையில் கேட்பது போல புத்தாண்டுக்கும், சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து சொல்ல நம்ம என்ன மன்மோகன் சிங்கா?

எட்டரை மாதத்தில் என்ன என்னவோ நடந்து விட்டது... சில அரசியல் புள்ளிகள் உள்ளே, சில மந்திரிகள் வெளியே, சில ஆட்சியே மாறிப் போச்சு... இருந்தாலும் இந்தியா வளரும், நல்ல நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

கனிமொழியின் கைது பற்றி தெரிந்ததும் என் நண்பன் செந்தில் அனுப்பிய குறும்பா, குறும்பாகவும் இருந்தது, நன்றாகவும் இருந்தது

             ஊழலில் விழுந்த
             முதல் விதை ஈன்ற
              கடைசிக் கனி
              இன்று சிறையில்..
              தெய்வம் நின்றாலும்
               கொல்லும்.....

'நின்றாவது' என்பதை 'நின்றாலும்' என மாற்றினேன் அவன் அனுமதியுடன்...

எத்தனையோ கசப்பான செய்திகள் இருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் சில நல்லவர்களை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தாண்டுப் பதிவில் என் நண்பரைப் பற்றிக் கூறி இருந்தேன். அவரின் தந்தை செய்து கொண்டிருக்கும் நற்செயல் அதைவிட நெகிழ வைத்தது.. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு அவர்களின் வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் ஒருவர் அப்போது மாரடைப்பால் இறந்து விட்டார். அவரின் மகளை இன்று வரை நண்பரின் தந்தை தான் படிக்க வைக்கிறார். அந்தப் பெண் இப்போது +2 படிக்கிறார்.

என்னுடன் கோவையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். தாய்நாட்டின் மீதான அக்கறையாலும், நம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்தியாவிற்கே திரும்பி வந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார். இது அண்மையில் தான் எனக்கு தெரிய வந்தது. பெருமிதமாக இருந்தது.

ஜெய்ஹிந்த்....!


Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெருகி, ஆரோக்கியம் நிறைந்த, இனிமையான ஆண்டாய் அமைய இறைவன் அருளட்டும்.

புத்தாண்டு கடப்பாடு (resolution) எடுப்பது நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்று. இதுநாள் வரை அப்படி ஒன்றைத் தீவிரமாகச் செய்யாத நான், இம்முறை 'தினமும் யோகாசனமும், எளிய உடற்பயிற்சிகளும் செய்து உடல் நலனைப் பேணுவது' என்ற கடப்பாட்டை எடுத்துள்ளேன். இதை எவ்வளவு சரியாகச் செய்கிறேன் என்பதை ஒரு காலாண்டுக்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். :-)  இந்தக் கடப்பாடுகளைப் புத்தாண்டு தொடங்கும் போது தான் எடுக்க வேண்டுமா? எப்படியோ ஒரு நல்ல முடிவை (decision) அல்லது தொடக்கத்தை (beginning) எடுக்க புத்தாண்டு உதவுமானால் மகிழ்ச்சியே.

நமக்காகச் செய்யும் நல்ல உறுதிமொழிகளைப் போல இந்த சமூகத்திற்காகவும் நம்மால் இயன்றதைச் செய்தால் அதன் நிறைவே தனி தான். அப்படி என்ன நம்மால் பெரிதாகச் செய்து விட முடியும்? என்று எண்ணவே வேண்டியது இல்லை. நம்முடைய செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு ஒரு சிறு நன்மை விளைந்தாலே போதும். உதாரணத்திற்கு, உலகம் வெப்ப மயமாதலை (global warming) தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்? வீட்டில் மின்விளக்குகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்கலாமே? பலமுறை பல நண்பர்களின் இல்லங்களில் யாருமே இல்லாத அறைகளிலும் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறேன். அதைத் தவிர்த்தாலே போதுமே. :-)

நான்கு நண்பர்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த போது, நாம் படித்து வளர்ந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு ஏதாவது உபயோகமாகச் செய்தால் என்ன, அதன் மூலம் அடிப்படைத் தேவைகளுக்கே திணறிக் கொண்டிருக்கும் பள்ளிகள் பயனடையுமே என்று ஆலோசித்தார்கள். Team India என்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவானது. யார் அந்த நண்பர்கள்? தமிழகக் கிராமங்களில் படித்து அமெரிக்காவில் பணிபுரியும் கணினி வல்லுனர்கள் அவர்கள். சிறு புள்ளியாய்த் தொடங்கி இன்று மிகப் பெரிய அமைப்பாக மாறியுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதன் உறுப்பினர்களின் உதவியுடன் பல பள்ளிகள் பயனடைந்துள்ளன. www.indiateam.org இணையத் தளத்தில் எல்லா விபரங்களும் இருக்கின்றன. எவ்வளவு சிறந்த பணி இது?

என்னுடன் பணிபுரியும் என் நெருங்கிய நண்பர் தனது மகனின் பிறந்த நாளை சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடிய விதம் என்னை நெகிழ வைத்தது. சிங்கப்பூரில் மனவளர்ச்சி குறைந்த, வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கான பள்ளியைத் தேடிப் பிடித்து, அத்தியாவசியத் தேவை ஒன்றைப் பூர்த்தி செய்து கொள்ள வசதியில்லாத ஒரு குழந்தைக்கு அந்தத் தேவையைச் செய்து கொடுக்க முடிவு செய்தார். ஒரு குழந்தைக்கு பார்வைக் குறைபாடும் இருந்துள்ளது. அதைச் சொல்லக் கூட அந்தக் குழந்தைக்கு தெரியவில்லை. கண் பரிசோதனை செய்து, கண்ணாடியும் வாங்கிக் கொடுத்துள்ளார். கண்ணாடி அணிந்த அந்த நிமிடத்தில் குழந்தை அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியவில்லை என்றார். அங்குள்ள மற்ற குழந்தைகளுக்கும் சிறு பரிசுகள் கொடுத்தார். தன் மகனையும் உடன் அழைத்து சென்று வந்தார். அதற்கு அவர் கூறிய காரணமும் என்னைக் கவர்ந்தது. 'சமூகத்தில் இப்படியும் குழந்தைகள் இருக்கிறார்கள். பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்குவதை விட பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி என்பதை அவன் மனதில் இப்போதே விதைத்து விட வேண்டும்' என்று கூறினார்? இதை விடச் சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டம் வேறு எது இருக்க முடியும்? யார் அந்த நண்பர்? வெளியே சொன்னால் அவருக்கு பிடிக்காது. உதவிக் குறிப்பு ஒன்று தருகிறேன் - நீங்களே கண்டு பிடியுங்கள் :-) அவருக்கு இரண்டு மகன்கள்.

இந்தியாவில் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாகி விட்டது. எனது அண்ணன் கூடுமான வரை விபத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கு உதவுவார். தீபாவளியன்றும், அதற்கு அடுத்த நாளும் இரு விபத்தில் சிக்கியவர்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்ததாகக் கூறினார். இரண்டாம் நாள் விபத்தில் சிக்கிய இரு வாலிபர்களிடம் கையில் இருந்த 1000 ரூபாயும் கொடுத்ததாகச் சொன்னார். 'ஒரு சட்டை குறைவாக எடுத்ததாக நினைத்துக் கொள்வோம்' என்றார். மகிழ்ச்சியாய் இருந்தது.

மிகப் பெரிய சமூக மாற்றங்களை செய்ய இயலாவிடினும் பரவாயில்லை. மேலே சொன்ன உதாரணங்கள் போல நம்மால் இயன்றதைச் செய்தாலே போதும். நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ செய்த இது போன்ற நல்ல செயல்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

அலுவலக உரையாடல் ஒன்றில் தனிமையே மன உளைச்சலுக்கான காரணங்களில் முக்கியமானது என்று பேசிக் கொண்டிருந்தோம். அன்றிரவு வீட்டில், ( தனிமையில் :-) )அதைப் பற்றி யோசித்து கொண்டிருந்த போது தோன்றிய வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதை ஒரு கவிதையாய் மாற்ற முயற்சிக்கிறேன்.

            மௌனத்தின் அலறலை விட
             இரைச்சலின் நிசப்தம்
             பெரும்பாலான நேரங்களில்
              இதமாய் இருக்கிறது
              மனதுக்கு...

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! நமக்கும், சமூகத்திற்குமான நற்செயல்களை நம்மால் இயன்றவரை செய்வோம்.

Saturday, December 4, 2010

தி.மு.க. வும் ஜெயகாந்தனும்

கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் இந்திய அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்: "தி.மு.க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் இப்போது நிலத் தரகர் வேலை தான்.. கருணாநிதி குடும்பத்தாருக்கு நிலம் வாங்கிக் கொடுப்பது தான் முக்கிய வேலையே." அரசியல் தொடர்புடைய பலருடனும் நண்பருக்கு தொடர்பு உண்டு. அவர் கூறிய இன்னொரு செய்தி என்னை மயக்கமடையச் செய்தது: "அரசுப் பயணமாக இங்கு வந்த தமிழக அமைச்சர் ஒருவர் அண்டை நாட்டில் 600 ஏக்கர் நிலத்தை வாரிசு ஒருவருக்காக வாங்கிச் சென்றுள்ளார்". ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்த்தால் இதெல்லாம் ஒரு செய்தியே இல்லை என்பது போலத் தோன்றும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான இடங்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என இந்தக் குடும்பம் ஆக்டோபஸ் போல வளைத்து விட்டது. 14 தொலைக்காட்சி அலைவரிசைகள், திரைப்படத் துறையில் முழு ஆக்கிரமிப்பு, கணக்கிட முடியாத பண பலம் எனத் தமிழகத்தில் ஏறத்தாள ஏகாதிபத்தியத்தை (monopoly) நிறுவி விட்டார்கள். "நல்லது எதுவும் நடக்காவிடினும் பரவாயில்லை, அடுத்த முறை ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்து, தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற மனநிலை தமிழகத்தில் நிறையப் பேருக்கு வந்து விட்டது.

திரு. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு,  ஒரு உலகம்' என்ற புதினத்தை (நாவல்) கடந்த வாரம் படித்தேன். ஜெயகாந்தனின் 1, 2 சிறுகதைகளை மட்டுமே, அதுவும் பல வருடங்களுக்கு முன்பு, படித்திருந்த எனக்கு இந்த புதினம் பெரிய 'வாசிப்பு அனுபவமாக' இருந்தது. எந்த திருப்பங்களும் இல்லாத, கற்பனைக்கெட்டாத விசயங்களெல்லாம் இல்லாத, ஒரு மனிதனுக்கும், அவனைச் சுற்றி உள்ளவர்களுக்குமான 2 மாத நிகழ்வுகளின் தொகுப்பாக இவ்வளவு சுவையாக எழுதி இருக்கிறார். ஒவ்வொரு இடத்தையும், கதாபாத்திரங்களின் குணாதிசியங்களையும், பல்வேறு சூழ்நிலைகளில் இந்தக் குணாதிசியங்கள் அனிச்சைச் செயலாய் எங்கனம் வெளிப்படுகிறது என்பதையும் அவர் விளக்கி எழுதி இருப்பது ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது.

கதாநாயகன் மிக்க நல்லவனாக, எல்லோரையும் மதிப்பவனாக, நெகிழ்ச்சியான அணுகுமுறை உள்ளவனாக இருப்பதற்கு 'முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத. சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புக்கள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே தழைத்த' குடும்பத்தில் சுதந்திரமாக வளர்ந்ததே காரணம் என்கிறார். நுகர்வுக் கலாச்சாரத்துக்கு முந்தைய (என் வயதை ஒத்தவர்களின் பள்ளிப் பருவத்தில்), ஓரளவு நிரந்தர வருமானம் உடைய, நல்ல பெற்றோர்கள் அமைந்த, நடுத்தரக் குடும்பங்களில் வளர்ந்தவர்களில் நிறைய பேருக்கு இதில் பாதி அனுபவமேனும் கிடைத்திருக்கும்.

கதையின் இன்னொரு நாயகனை இவன் வாழ்த்துவதற்கு சொல்லும் காரணம் என்னைக் கவர்ந்தது 'வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொள்கிறவர்கள் தான் ரொம்பக் குறைவு. அந்தக் குறைவானவர்களில் நீங்களும் ஒருவர்...'

இது போல பல இடங்களில் மிக எளிமையாக, சாதாரணமாக தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லாத நாயகன், நண்பனுக்காக குடிக்க சம்மதிக்கிறான். நண்பன் உடனே 'எனக்காக உங்கள் கொள்கையைத் தளர்த்திக் கொள்ள வேண்டாம்' என்கிறான். அதற்கு 'எனது கொள்கையே ஃபிளெக்சிபிளாக இருப்பது தான்' என்று பதிலளிக்கிறான். எவ்வளவு நல்ல செய்தி இது. இதை நாம் ஓரளவு (குடிப்பதை சொல்லவில்லை :-) ) கடைப்பிடித்தாலே போதும் - வீடோ, அலுவலகமோ எல்லா இடங்களிலும் கர்வமில்லாத சுமூகமான சூழல் நிலவும்.

வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் இந்தப் புதினத்தைப் படியுங்கள். சிங்கப்பூரில் நூலகங்களில் இது கிடைக்கும்.

சரி... தி.மு.க. வுக்கும் (திரு. மு. க.), ஜெயகாந்தனுக்கும் என்ன தொடர்பு? புதினத்தின் தலைப்பு: 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்'. கருணாநிதி அவர்களின் குடும்பச் சொத்துக்களைப் பார்க்கும் போது 'ஒரு மனிதன், ஒரு குடும்பம், தமிழ் நாடு' என்பது பொருத்தமாகிறது. :-)

பீகார் முடிவுகள் - ஓர் அலசல்

பீகார் தேர்தல் முடிவுகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிதீஷ் குமார் என்ற தனி மனிதரின் பணிகளுக்கு மக்கள் அளித்த சிறந்த அங்கீகாரமே இந்த பெரிய வெற்றி. ஒரு விதத்தில் இந்த அங்கீகாரத்தை அடைவது அவருக்கு சுலபமாகவே இருந்திருக்கும் - லாலுவின் அலங்கோலங்கள் தொடராமல் பார்த்துக் கொண்டிருந்தாலே மக்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். அதையும் தாண்டி ஒரு நல்லாட்சியை அளித்திருக்கிறார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு இருந்த கடும் போட்டி (சந்திரபாபு நாயுடு) போலல்லாமல் சுலபமான எதிரிகள் தான் நிதீஷுக்கு இருந்தார்கள்.

'மதசார்பின்மை' கோஷம் எல்லாம் எடுபடவில்லை, பா.ஜ.க இங்கே நல்ல வெற்றி பெற்றுள்ளது என்று நண்பர் ஒருவர் கூறினார். நிதீஷ் குமாரே 'மதசார்பின்மை' கோஷம் எழுப்புவதில் முதன்மையானவர் தான். இது நிதீஷுக்கு கிடைத்த வெற்றி - கூட்டணியாக இருந்த பா.ஜ.க-வும் நல்ல பயனைப் பெற்றது என்று நான் கூறினேன். என்று பா.ஜ.க 'இந்துத்துவா'  கோஷத்தை கையில் எடுத்ததோ அன்றில் இருந்து தான் 'மதசார்பின்மை' கோஷமும் வலுப்பெற்றது. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதும், மக்களுக்கு இவர்களின் 'இந்துத்துவா' கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்ததும், 'வளர்ச்சி' கோஷத்தை அது முழங்க ஆரம்பித்தது. மொழியை வைத்து தி.மு.க. செய்த அரசியலை விட மதத்தை வைத்து பா.ஜ.க. செய்த அரசியல் ஆபத்தானது. எப்படியோ 'இந்துத்துவா' வை கைவிட்டு விட்டது போல காட்டிக் கொள்வது உண்மையாய் இருக்குமெனில் அது ஒரு நல்ல செய்தியே.

உண்மையிலேயே பீகாரில் பா.ஜ.க.-வுக்கு இவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்குமானால், 'மோடியோ, வருண்காந்தியோ இங்கே பிரச்சாரத்துக்கு கண்டிப்பாக வரக் கூடாது' என்ற நிதீஷின் கட்டளையை புறந்தள்ளி இருப்பார்கள். அவர் என்ன சொன்னாலும் சரியென்று ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் தான் பா.ஜ.க. இருந்தது.

காங்கிரசின் படுதோல்வியும் நல்ல செய்தியே. பீகார் மக்களிடம் இருந்து கட்சி எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல மாநிலங்களிலும் இதே நிலைமை தான். ராகுலின் 'மேஜிக்' எடுபடவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். நல்லாட்சி தந்த முதல்வருக்கெதிராக சரியான மாற்றாக முன்னிறுத்த ஒரு தலைவர் இல்லாத நிலைமையில், லாலு - பாஸ்வானுடன் கூட்டணி வைத்து 10 - 15 இடங்களைப் பெறுவதை விட தனியாகவே நிற்கலாம் என்ற ராகுலின் முடிவு பாராட்டப் பட வேண்டிய ஒன்றே. தொடர்ந்து இரு முறை தனியாக நின்று தான் உ.பி.-யில் ஓரளவு மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் பெற முடிந்தது. அதே அளவு முயற்சிகளை ராகுலும் காங்கிரசும் இங்கும் தொடர்ந்து செய்ய வேண்டும். மிகுந்த நம்பிக்கை வைத்து நீண்ட காலம் ஆதரித்த கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவே இந்த வீழ்ச்சி.

மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ என்ன அரசியல் செய்தாலும், நல்லாட்சி கொடுத்த ஒருவர் முன்னால் அது செல்லாது இனிமேல் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நிதீஷ் குமார் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாமல் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும் - வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Sunday, October 24, 2010

காமன்வெல்த் போட்டியும் அயோத்தி தீர்ப்பும்

உலக நாடுகளில் பல, இந்தியா எப்படியும் திணறி தலைகுனிய போகிறது என ஆர்வத்துடன் எதிர்பார்த்த இரு முக்கிய நிகழ்வுகளிலும் இந்தியா & இந்தியர்களின் சிறப்பான செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

முதலில் காமன்வெல்த் போட்டி:

காமன்வெல்த் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என இந்தியா முயன்றது ஏன்? என்பதே எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் எதைச் சாதிக்க, எதை உலகுக்கு சொல்ல அல்லது யாருக்கு போட்டியாக நமது திறமையைக் காட்ட நினைத்தோமோ தெரியவில்லை.

ஒரு சர்வதேச போட்டியை சிறப்பாக நடத்தும் திறமையும், திட்டமிட்ட செயல்பாடும் உடையவர்கள் நாங்கள் என உலகுக்கு காட்டுவது தான்
உண்மையிலேயே நமது நோக்கம் என்றால் ஆரம்பகால சொதப்பல்கள் எல்லாமே அதற்கு எதிராகவே அமைந்தன.

விளையாட்டு துறை அமைச்சர் திரு. கில் சர்வசாதாரணமாக 'கடைசி இரு வாரங்களில் எல்லாமே சரி செய்து விடுவோம். கடைசி நிமிடங்களில் எல்லா வேலைகளையும் செய்யும் இந்திய இல்லத் திருமணங்களைப் போலத் தான் இதுவும்' என்று கூறினார். ஓரளவுக்கு இது உண்மையும் கூட.

கடைசி நிமிடத்தில் ஏதாவது செய்து ஒப்பேற்றி விடுவோம் என்பது நமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (இது கூட தவறு தான்). ஆனால் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும், பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வில் இப்படி இருந்தது எந்த விதத்திலும் இந்தியாவிற்கு சிறப்பில்லை.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் பல நாடுகளுக்கு இந்த குளறுபடிகளெல்லாம் பெரும் வசதியாய் அமைந்தன. சில நாட்டு ஊடகங்கள் சீனாவின் ஒலிம்பிக் சிறப்பை ஒப்பீடு செய்து நம்மை விமர்சித்தன. தீவிரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், தொடர்மழையும் அதன் விளைவான தொற்றுநோய் அபாயமும், அயோத்தி தீர்ப்பும் அதன் விளைவான கலவர பயமும் என சீனாவுக்கு இல்லாத எத்தனையோ 'சனநாயக நாட்டிற்கான' பிரச்னைகளும் இந்தியாவுக்கு இருந்தன. ஆனால், கடைசி இரு வாரங்களில் அனைத்தையும் சரிசெய்து, துவக்க நிகழ்ச்சி முதல் நிறைவு விழா வரை சர்வதேசத் தரத்துடன் நடத்திக் காட்டி எல்லோரையும் வாயடைக்கச் செய்து விட்டோம்.

விமர்சனம் செய்த அளவுக்கு, சிறப்பாக நடத்திக் காட்டிய திறமையைப் பாராட்ட ஏனோ சர்வதேச ஊடகங்களுக்கு மனமில்லை. விளையாட்டு நகரத்தில் பாலம் ஒன்று உடைந்ததை மிகப்பெரிய அளவில் விமர்சித்து பூதாகரமாக்கியவர்களுக்கு, ஐந்தே நாட்களில் நமது ராணுவம் அதை சரிசெய்ததைப் பாராட்டத் தோணவில்லை.

வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இந்த ஊடகங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டு 'நம்ம இந்தியா இப்படித் தான்' என்று இளக்காரமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின் ஊடகங்களின் நம்பகத்தன்மை, நடுநிலைமை எல்லாமே கேள்விக்குரியவை ஆகிவிட்டன. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

எப்படியோ காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடந்து முடிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையே. ஊழல் பிரச்னைகளெல்லாம் நம் உள்நாட்டுப் பிரச்னைகள் :-)

அயோத்தி தீர்ப்பு:

காமன்வெல்த் போட்டி நெருங்கும் வேளையில் அயோத்தி தீர்ப்பும் வெளிவர அதனுடைய எதிரொலி எப்படி இருக்குமோ என எல்லோருக்குமே மிகப்பெரிய கவலை இருந்தது. தீர்ப்பு தங்களுக்கு எதிரானது என எண்ணி ஏதாவது ஒரு சாரார் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இந்தியர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தொடர்வதில் எந்த விருப்பமும் இல்லை என்பதையே தீர்ப்பின் பிந்தைய நாட்கள் உணர்த்தியது.

நீதிமன்றங்களுக்கும் அவைகளின் தீர்ப்புக்கும் இந்தியர்கள் தரும் மரியாதையும் மீண்டும் நிரூபணமாகியது. இதே தீர்வை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சொல்லி இருந்தால், ஒருவேளை இது அரசியலாக்கப் பட்டிருக்கலாம்.

எப்படியோ சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னைக்கான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பும் அமைதி காத்தது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!

இருப்பினும் திரு. சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டி இருந்த திரு. மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது

       பாபருக்கு வேண்டும் மசூதி
       ராமருக்கு வேண்டும் கோயில்
      சனங்களுக்கு வேண்டும் சுகாதாரமான
      கழிப்பறைகளேனும்..

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்றும் பொருந்துவது வருத்தத்திற்குரியது.