பீகார் தேர்தல் முடிவுகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிதீஷ் குமார் என்ற தனி மனிதரின் பணிகளுக்கு மக்கள் அளித்த சிறந்த அங்கீகாரமே இந்த பெரிய வெற்றி. ஒரு விதத்தில் இந்த அங்கீகாரத்தை அடைவது அவருக்கு சுலபமாகவே இருந்திருக்கும் - லாலுவின் அலங்கோலங்கள் தொடராமல் பார்த்துக் கொண்டிருந்தாலே மக்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். அதையும் தாண்டி ஒரு நல்லாட்சியை அளித்திருக்கிறார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு இருந்த கடும் போட்டி (சந்திரபாபு நாயுடு) போலல்லாமல் சுலபமான எதிரிகள் தான் நிதீஷுக்கு இருந்தார்கள்.
'மதசார்பின்மை' கோஷம் எல்லாம் எடுபடவில்லை, பா.ஜ.க இங்கே நல்ல வெற்றி பெற்றுள்ளது என்று நண்பர் ஒருவர் கூறினார். நிதீஷ் குமாரே 'மதசார்பின்மை' கோஷம் எழுப்புவதில் முதன்மையானவர் தான். இது நிதீஷுக்கு கிடைத்த வெற்றி - கூட்டணியாக இருந்த பா.ஜ.க-வும் நல்ல பயனைப் பெற்றது என்று நான் கூறினேன். என்று பா.ஜ.க 'இந்துத்துவா' கோஷத்தை கையில் எடுத்ததோ அன்றில் இருந்து தான் 'மதசார்பின்மை' கோஷமும் வலுப்பெற்றது. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதும், மக்களுக்கு இவர்களின் 'இந்துத்துவா' கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்ததும், 'வளர்ச்சி' கோஷத்தை அது முழங்க ஆரம்பித்தது. மொழியை வைத்து தி.மு.க. செய்த அரசியலை விட மதத்தை வைத்து பா.ஜ.க. செய்த அரசியல் ஆபத்தானது. எப்படியோ 'இந்துத்துவா' வை கைவிட்டு விட்டது போல காட்டிக் கொள்வது உண்மையாய் இருக்குமெனில் அது ஒரு நல்ல செய்தியே.
உண்மையிலேயே பீகாரில் பா.ஜ.க.-வுக்கு இவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்குமானால், 'மோடியோ, வருண்காந்தியோ இங்கே பிரச்சாரத்துக்கு கண்டிப்பாக வரக் கூடாது' என்ற நிதீஷின் கட்டளையை புறந்தள்ளி இருப்பார்கள். அவர் என்ன சொன்னாலும் சரியென்று ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் தான் பா.ஜ.க. இருந்தது.
காங்கிரசின் படுதோல்வியும் நல்ல செய்தியே. பீகார் மக்களிடம் இருந்து கட்சி எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல மாநிலங்களிலும் இதே நிலைமை தான். ராகுலின் 'மேஜிக்' எடுபடவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். நல்லாட்சி தந்த முதல்வருக்கெதிராக சரியான மாற்றாக முன்னிறுத்த ஒரு தலைவர் இல்லாத நிலைமையில், லாலு - பாஸ்வானுடன் கூட்டணி வைத்து 10 - 15 இடங்களைப் பெறுவதை விட தனியாகவே நிற்கலாம் என்ற ராகுலின் முடிவு பாராட்டப் பட வேண்டிய ஒன்றே. தொடர்ந்து இரு முறை தனியாக நின்று தான் உ.பி.-யில் ஓரளவு மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் பெற முடிந்தது. அதே அளவு முயற்சிகளை ராகுலும் காங்கிரசும் இங்கும் தொடர்ந்து செய்ய வேண்டும். மிகுந்த நம்பிக்கை வைத்து நீண்ட காலம் ஆதரித்த கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவே இந்த வீழ்ச்சி.
மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ என்ன அரசியல் செய்தாலும், நல்லாட்சி கொடுத்த ஒருவர் முன்னால் அது செல்லாது இனிமேல் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நிதீஷ் குமார் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாமல் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும் - வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
No comments:
Post a Comment