கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் இந்திய அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்: "தி.மு.க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் இப்போது நிலத் தரகர் வேலை தான்.. கருணாநிதி குடும்பத்தாருக்கு நிலம் வாங்கிக் கொடுப்பது தான் முக்கிய வேலையே." அரசியல் தொடர்புடைய பலருடனும் நண்பருக்கு தொடர்பு உண்டு. அவர் கூறிய இன்னொரு செய்தி என்னை மயக்கமடையச் செய்தது: "அரசுப் பயணமாக இங்கு வந்த தமிழக அமைச்சர் ஒருவர் அண்டை நாட்டில் 600 ஏக்கர் நிலத்தை வாரிசு ஒருவருக்காக வாங்கிச் சென்றுள்ளார்". ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்த்தால் இதெல்லாம் ஒரு செய்தியே இல்லை என்பது போலத் தோன்றும்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான இடங்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என இந்தக் குடும்பம் ஆக்டோபஸ் போல வளைத்து விட்டது. 14 தொலைக்காட்சி அலைவரிசைகள், திரைப்படத் துறையில் முழு ஆக்கிரமிப்பு, கணக்கிட முடியாத பண பலம் எனத் தமிழகத்தில் ஏறத்தாள ஏகாதிபத்தியத்தை (monopoly) நிறுவி விட்டார்கள். "நல்லது எதுவும் நடக்காவிடினும் பரவாயில்லை, அடுத்த முறை ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்து, தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற மனநிலை தமிழகத்தில் நிறையப் பேருக்கு வந்து விட்டது.
திரு. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' என்ற புதினத்தை (நாவல்) கடந்த வாரம் படித்தேன். ஜெயகாந்தனின் 1, 2 சிறுகதைகளை மட்டுமே, அதுவும் பல வருடங்களுக்கு முன்பு, படித்திருந்த எனக்கு இந்த புதினம் பெரிய 'வாசிப்பு அனுபவமாக' இருந்தது. எந்த திருப்பங்களும் இல்லாத, கற்பனைக்கெட்டாத விசயங்களெல்லாம் இல்லாத, ஒரு மனிதனுக்கும், அவனைச் சுற்றி உள்ளவர்களுக்குமான 2 மாத நிகழ்வுகளின் தொகுப்பாக இவ்வளவு சுவையாக எழுதி இருக்கிறார். ஒவ்வொரு இடத்தையும், கதாபாத்திரங்களின் குணாதிசியங்களையும், பல்வேறு சூழ்நிலைகளில் இந்தக் குணாதிசியங்கள் அனிச்சைச் செயலாய் எங்கனம் வெளிப்படுகிறது என்பதையும் அவர் விளக்கி எழுதி இருப்பது ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது.
கதாநாயகன் மிக்க நல்லவனாக, எல்லோரையும் மதிப்பவனாக, நெகிழ்ச்சியான அணுகுமுறை உள்ளவனாக இருப்பதற்கு 'முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத. சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புக்கள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே தழைத்த' குடும்பத்தில் சுதந்திரமாக வளர்ந்ததே காரணம் என்கிறார். நுகர்வுக் கலாச்சாரத்துக்கு முந்தைய (என் வயதை ஒத்தவர்களின் பள்ளிப் பருவத்தில்), ஓரளவு நிரந்தர வருமானம் உடைய, நல்ல பெற்றோர்கள் அமைந்த, நடுத்தரக் குடும்பங்களில் வளர்ந்தவர்களில் நிறைய பேருக்கு இதில் பாதி அனுபவமேனும் கிடைத்திருக்கும்.
கதையின் இன்னொரு நாயகனை இவன் வாழ்த்துவதற்கு சொல்லும் காரணம் என்னைக் கவர்ந்தது 'வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொள்கிறவர்கள் தான் ரொம்பக் குறைவு. அந்தக் குறைவானவர்களில் நீங்களும் ஒருவர்...'
இது போல பல இடங்களில் மிக எளிமையாக, சாதாரணமாக தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லாத நாயகன், நண்பனுக்காக குடிக்க சம்மதிக்கிறான். நண்பன் உடனே 'எனக்காக உங்கள் கொள்கையைத் தளர்த்திக் கொள்ள வேண்டாம்' என்கிறான். அதற்கு 'எனது கொள்கையே ஃபிளெக்சிபிளாக இருப்பது தான்' என்று பதிலளிக்கிறான். எவ்வளவு நல்ல செய்தி இது. இதை நாம் ஓரளவு (குடிப்பதை சொல்லவில்லை :-) ) கடைப்பிடித்தாலே போதும் - வீடோ, அலுவலகமோ எல்லா இடங்களிலும் கர்வமில்லாத சுமூகமான சூழல் நிலவும்.
வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் இந்தப் புதினத்தைப் படியுங்கள். சிங்கப்பூரில் நூலகங்களில் இது கிடைக்கும்.
சரி... தி.மு.க. வுக்கும் (திரு. மு. க.), ஜெயகாந்தனுக்கும் என்ன தொடர்பு? புதினத்தின் தலைப்பு: 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்'. கருணாநிதி அவர்களின் குடும்பச் சொத்துக்களைப் பார்க்கும் போது 'ஒரு மனிதன், ஒரு குடும்பம், தமிழ் நாடு' என்பது பொருத்தமாகிறது. :-)
Saturday, December 4, 2010
பீகார் முடிவுகள் - ஓர் அலசல்
பீகார் தேர்தல் முடிவுகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிதீஷ் குமார் என்ற தனி மனிதரின் பணிகளுக்கு மக்கள் அளித்த சிறந்த அங்கீகாரமே இந்த பெரிய வெற்றி. ஒரு விதத்தில் இந்த அங்கீகாரத்தை அடைவது அவருக்கு சுலபமாகவே இருந்திருக்கும் - லாலுவின் அலங்கோலங்கள் தொடராமல் பார்த்துக் கொண்டிருந்தாலே மக்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். அதையும் தாண்டி ஒரு நல்லாட்சியை அளித்திருக்கிறார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு இருந்த கடும் போட்டி (சந்திரபாபு நாயுடு) போலல்லாமல் சுலபமான எதிரிகள் தான் நிதீஷுக்கு இருந்தார்கள்.
'மதசார்பின்மை' கோஷம் எல்லாம் எடுபடவில்லை, பா.ஜ.க இங்கே நல்ல வெற்றி பெற்றுள்ளது என்று நண்பர் ஒருவர் கூறினார். நிதீஷ் குமாரே 'மதசார்பின்மை' கோஷம் எழுப்புவதில் முதன்மையானவர் தான். இது நிதீஷுக்கு கிடைத்த வெற்றி - கூட்டணியாக இருந்த பா.ஜ.க-வும் நல்ல பயனைப் பெற்றது என்று நான் கூறினேன். என்று பா.ஜ.க 'இந்துத்துவா' கோஷத்தை கையில் எடுத்ததோ அன்றில் இருந்து தான் 'மதசார்பின்மை' கோஷமும் வலுப்பெற்றது. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதும், மக்களுக்கு இவர்களின் 'இந்துத்துவா' கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்ததும், 'வளர்ச்சி' கோஷத்தை அது முழங்க ஆரம்பித்தது. மொழியை வைத்து தி.மு.க. செய்த அரசியலை விட மதத்தை வைத்து பா.ஜ.க. செய்த அரசியல் ஆபத்தானது. எப்படியோ 'இந்துத்துவா' வை கைவிட்டு விட்டது போல காட்டிக் கொள்வது உண்மையாய் இருக்குமெனில் அது ஒரு நல்ல செய்தியே.
உண்மையிலேயே பீகாரில் பா.ஜ.க.-வுக்கு இவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்குமானால், 'மோடியோ, வருண்காந்தியோ இங்கே பிரச்சாரத்துக்கு கண்டிப்பாக வரக் கூடாது' என்ற நிதீஷின் கட்டளையை புறந்தள்ளி இருப்பார்கள். அவர் என்ன சொன்னாலும் சரியென்று ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் தான் பா.ஜ.க. இருந்தது.
காங்கிரசின் படுதோல்வியும் நல்ல செய்தியே. பீகார் மக்களிடம் இருந்து கட்சி எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல மாநிலங்களிலும் இதே நிலைமை தான். ராகுலின் 'மேஜிக்' எடுபடவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். நல்லாட்சி தந்த முதல்வருக்கெதிராக சரியான மாற்றாக முன்னிறுத்த ஒரு தலைவர் இல்லாத நிலைமையில், லாலு - பாஸ்வானுடன் கூட்டணி வைத்து 10 - 15 இடங்களைப் பெறுவதை விட தனியாகவே நிற்கலாம் என்ற ராகுலின் முடிவு பாராட்டப் பட வேண்டிய ஒன்றே. தொடர்ந்து இரு முறை தனியாக நின்று தான் உ.பி.-யில் ஓரளவு மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் பெற முடிந்தது. அதே அளவு முயற்சிகளை ராகுலும் காங்கிரசும் இங்கும் தொடர்ந்து செய்ய வேண்டும். மிகுந்த நம்பிக்கை வைத்து நீண்ட காலம் ஆதரித்த கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவே இந்த வீழ்ச்சி.
மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ என்ன அரசியல் செய்தாலும், நல்லாட்சி கொடுத்த ஒருவர் முன்னால் அது செல்லாது இனிமேல் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நிதீஷ் குமார் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாமல் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும் - வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Subscribe to:
Comments (Atom)